Published : 10 Jul 2022 08:02 AM
Last Updated : 10 Jul 2022 08:02 AM
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி கடலில் குளித்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் உட்பட 3 பேர் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ராஜகம்பீரம் பகுதியில் இருந்து உறவினர்கள் 15 பேர் நேற்று வேளாங்கண்ணிக்குச் சுற்றுலா வந்தனர். வேளாங்கண்ணி கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமான விடுதியில் தங்கியிருந்தனர். பின்னர், அருள் ஜோசப் மகள் ஆரோக்கிய ஷெரின்(21), இவரது தங்கை சகாய ரியானா(13), ராபர்ட் பென்ஜமின் மகள் ஆண்டோ சகாரா(14) ஆகியோர் உட்பட சிலர் கடலில் குளித்தனர். அப்போது, அலையில் சிக்கி 3 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். முதலுதவி சிகிச்சை அளித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், 3 பேரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT