

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரம் முக்கியகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னையில் நாளை (ஜூலை 11) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம், பெரியகடை வீதியில் உள்ள மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.
பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.வும், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்து பேசினார். அப்போது பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் சுமார் 30-க்கும் மேற்பட்டோருக்கான உறுப்பினர்அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும், சென்னைக்கு புறப்பட்டு செல்வது குறித்தும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், கட்சியை வழிநடத்திச் செல்ல ஒற்றைத் தலைமையை வலியுறுத்தியதுடன், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னை செல்வது, எங்கு தங்குவது மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்கு செல்லும் நேரம் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட விவரங்கள் செல்போனில் தெரிவிக்கப்படும் என அதிமுகவினர் தெரிவித்தனர்.