

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது. மகிழ்ச்சியடைந்த பயணிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஈரோட்டில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு 12 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் சென்றடையும். இதேபோல் மாலை 4.35 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் ரயில் இரவு 8.45 மணிக்கு திருச்சி சென்றடையும்.
இதுபோல் திருச்சியில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு 11.10 மணிக்கு ஈரோடு ரயில் நிலையம் வந்தடையும். மாலை 4.35 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு ஈரோடு ரயில் நிலையம் வந்தடையும்.
இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஈரோடு-திருச்சி ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் நாள்தோறும் ஈரோடு - திருச்சி, திருச்சி - ஈரோடு வந்து சென்ற பல ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
கரோனா பரவல் குறைந்ததையடுத்து மீண்டும் பயணிகள் ரயிலை இயக்க வேண்டுமென பயணிகள் மட்டுமன்றி அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் சார்பில் ரயில்வே நிர்வாகத்திற்கு தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதன்பலனாக ஈரோடு- திருச்சி பயணிகள் ரயில் இயக்கம் நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 8.10 மணிக்கு ஈரோடு - திருச்சி ரயில் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ரயில் இயக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த பயணிகள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.