

உயர்கல்வியில் விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்வுசெய்து படித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று ‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்து என்ன படிப்பது, எங்கே படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என்பன உட்பட பல்வேறு கேள்விகள் மாணவர்கள் மனதில் எழும். அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கும் வகையில், ‘இந்து தமிழ் திசை’, அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்கும், ‘உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் இருநாள் வழிகாட்டு நிகழ்ச்சிசென்னையில் நேற்று தொடங்கியது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியின் மான்ட்போர்ட் இண்டோர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற வழிகாட்டு நிகழ்ச்சியில் சோஹோ ஸ்கூல் ஆப் லேர்னிங் மற்றும் சோஹோ நிறுவனத் தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி, சென்னைசகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் செயலர் பி.ஜி.சுப்ரமணியன், அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் கல்லூரியின் முதல்வர் பி.சங்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சயில் சோஹோ நிறுவனத் தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி பேசியதாவது; எதிர்கால தலைமுறையான மாணவர்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்பதை மனதில் வைத்து உயர்கல்வியை தேர்வு செய்ய வேண்டும். உலகுக்கு புதிய அம்சங்களைக் கண்டறிந்து வழங்கும் படைப்பாளிகளே சாதனைகளை மேற்கொள்கின்றனர். நுகர்வோராக மட்டுமே வாழ்வது அர்த்தமற்றது.
அதனால் நீங்கள் அனைவரும் புதுமையாக சிந்திக்கும் படைப்புத் திறன் உள்ளவர்களாக தகுதிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசிரியர், சுய ஆர்வம், நண்பர்குழு, வாழ்க்கை அனுபவம் என நான்கு விதமான கற்றல்வழிகளில் நமக்கான படிப்பினையைப் பெறுகிறோம். இவை அனைத்தையும் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் தோல்வி வந்தாலும் தவறை சரிசெய்து மனம் தளராமல் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும்.
உலகில் தற்போது பெரும்செல்வந்தர்களாக இருப்பவர்களில் பலர் அறிவார்ந்த தொழில் முனைவோராகத் திகழ்கின்றனர். அவர்கள் ஒருபோதும் பணத்தை குறிவைத்து தங்கள் இலக்கை நிர்ணயிக்கவில்லை. எனவே,புதுமையான மாற்றத்தை உருவாக்க நினைப்பவர்களே சிறந்த தொழில் முனைவோராக நிலைக்க முடியும்.
எதிர்காலத்தில் நமக்கான பெரும் அச்சுறுத்தல் சைபர்குற்றங்களாகும். அதுசார்ந்த துறைகளில் மாணவர்கள் கவனத்தைச் செலுத்தினால் எளிதில் வேலைவாய்ப்புகளைப் பெறமுடியும். நாம்நினைப்பதை சரியாக எழுதுவதற்கான மொழியறிவு, சொல்வதற்கான பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கணினிதொழில்நுட்பம் மனித வாழ்வில் மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. எனவே, எந்தத்துறையைத் தேர்வு செய்தாலும் கணினி தொழில்நுட்ப அறிவை நாம் பெற்றிருப்பதும் அவசியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் கல்லூரியின் முதல்வர் பி.சங்கர், சென்னைசகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் செயலர் பி.ஜி.சுப்ரமணியன் ஆகியோர் பேசும்போது, “பொறியியல், கலை, அறிவியல் உட்பட எந்தத் துறையாக இருந்தாலும் மாணவர்கள் உயர்கல்வி செல்லும்போது தங்களுக்கு பிடித்ததுறையைத் தேர்வுசெய்து படிக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் துறையில் சிறந்த வளர்ச்சியைப் பெற முடியும். அதற்கு பெற்றோர் வழிகாட்ட வேண்டும். இதன்மூலம் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட போட்டித் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கலை, அறிவியலில் ஏதேனும் பாடப்பிரிவைத் தேர்வு செய்து படிப்பது சிறந்தது. அதனுடன் படிக்கும்போது தேர்வுக்கான பயிற்சிகளையும் முறையாகப் பெற்று தயாராக வேண்டும்” என்று தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் வினவிய சந்தேகங்களுக்கு துறை நிபுணர்கள் விளக்கம், ஆலோசனைகளை வழங்கினர். இந்த நிகழ்வில் சென்னை உட்படபல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்துகொண்டனர். தொடர்ந்து 2-ம் நாளான இன்றும் (ஜூலை 10) நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00729 என்ற லிங்க்-ல் பதிவு செய்து கொள்ளலாம்.