மவுனப் புரட்சிக்கு மக்கள் தயார்: ராமதாஸ் கருத்து

மவுனப் புரட்சிக்கு மக்கள் தயார்: ராமதாஸ் கருத்து
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலில் மவுனப் புரட்சிக்கு மக்கள் தயாராகிவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித் துள்ளார்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கடந்த 2011-ல் திமுக ஆட்சிக்கு எதிரான அலை வீசியதால் அக்கட்சி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. அதைவிட அதிகமாக இப்போது ஆளும் அதிமுகவுக்கு எதிரான அலை வீசுகிறது. திமுக மீதும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

புதிய வாக்காளர்களான இளைஞர்கள், இதுவரை வாக்குச் சாவடிக்கே வராதவர்கள், நடு நிலை வாக்காளர்கள் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்புகின்றனர்.

கடந்த ஓராண்டுக்கு முன்பே அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம். ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கையில் விளக்கமாக குறிப்பிட்டுள்ளோம்.

இதனால் ஈர்க்கப்பட்ட இளை ஞர்களும், நடுநிலையாளர்களும் பாமகவுக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டார்கள். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மக்கள் மவுனப் புரட்சிக்கு தயாராகிவிட்டார்கள்.

2 துணை முதல்வர்கள்

பாமக ஆட்சிக்கு வந்தால் முதல்வருக்கு உதவி செய்ய 2 துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள். அதில் ஒருவர் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், ஒருவர் பெண்ணாகவும் இருப்பார். முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் 2 ஆண்டுகளில் சிறப்பாக செயல்படாவிட்டால் பதவி விலகுவார்கள்.

தமிழகத்தில் அதிமுக, திமுக இரு கட்சிகளும் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகின்றன. இதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை. பல இடங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் வாகனங்களிலேயே பணம் கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை ரூ.100 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைவிட 100 மடங்கு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

நேர்மையான, வெளிப்படை யான தேர்தலை நடத்துவோம் என தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in