Published : 09 Jul 2022 06:46 AM
Last Updated : 09 Jul 2022 06:46 AM

ராமேசுவரம் அருகே அரியமான் கடலில் ஆபத்தான படகு சவாரி

அரியமான் கடற்கரையில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி நடத்தப்படும் படகு சவாரி.

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே அரியமான் கடலில் ஆபத்தான படகு சவாரி நடத்துபவர்கள் மீது மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராமேசுவரம் அருகே அரியமான் கடற்கரை சுற்றுலாவுக்கு புகழ்பெற்று விளங்குகிறது. தினந்தோறும் அரியமான் கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்கள் என்றால் பயணிகளின் கூட்டம் இரண்டு மடங்காகிவிடும்.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடலோரத்தில் குளிப்பதற்கும், குடும்பத்துடன் வருவோர் படகு சவாரி செய்யவும் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இங்கு தனியார் படகு சவாரி நடத்துபவர்கள் ஒரு நபருக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டணத்தில் சுற்றுலாப் பயணி களை கடலுக்குள் அழைத்துச் செல்கின்றனர். ஆனால் படகு சவாரி செய்வோர் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி பயணம் செய்கின்றனர்.

மேலும் அனுமதிக்கப்பட்ட பயணிகளை காட்டிலும் கூடுதல் பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். இதனால் பயணிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதுபோன்ற படகு சவாரியை தடுக்காமல் மரைன் போலீஸார் மவுனம் காக்கின்றனர்.

அரியமான் கடற்கரையில் ஆபத்தான முறையில் படகு சவாரி நடத்தும் படகின் உரிமையாளர்கள் மீது மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், தன்னார் வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x