சென்னையில் ஒரே நாளில் தலைமறைவாக இருந்த 55 குற்றவாளிகள் கைது

சென்னையில் ஒரே நாளில் தலைமறைவாக இருந்த 55 குற்றவாளிகள் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை காவல் துறை சார்பில் நேற்று நடைபெற்ற ஒரு நாள் தீவிர சோதனையில் தலைமறைவாக இருந்த 55 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு வழக்கு விசாரணைகளின்போது நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாமல் தலைமறைவாகயிருந்து வரும் நீதிமன்ற பிடியாணை குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், நீதிமன்ற பிணை உத்தரவுகளை மீறிய குற்றவாளிகளின் பிணையை ரத்து செய்ய நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யுமாறும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பிறப்பித்த உத்தரவின் பெயரில் நேற்று ஒரு நாள் சிறப்பு தீவிர சோதனை நடத்தப்பட்டது.

12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர் நடத்திய சோதனையில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 55 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 115 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதன் மூலம் மொத்தம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 170 குற்றவளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

மேலும், நீதிமன்றத்தில் பிணை உத்தரவு பெற்ற குற்றவாளிகள் நீதிமன்றம் அளித்த உத்தரவுகளை மீறியது தொடர்பாக, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் 41 குற்றவாளிகளின் பிணையை ரத்த செய்ய சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதில் 7 மனுக்களில் சம்பந்தப்பட்ட 7 குற்றவாளிகளின் பிணையை ரத்து செய்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு எதிரான இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என சென்னை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in