Published : 09 Jul 2022 11:34 AM
Last Updated : 09 Jul 2022 11:34 AM

ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக பயன்படுத்த விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்? 

சென்னை: ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்துப் பயன்படுத்துவற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில், ஏரிகளிலும் குளங்களிலும் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்துவது தொடர்பாக கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பில், “ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று எடுத்துக் கொள்ள தொழில் துறை, நீர்வள ஆதாரத் துறையின் ஒத்துழைப்புடன், விவசாய நிலங்களின் வளத்தை உயர்த்தும் வகையில், விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாவட்ட ஆட்சியர், தொடர்புடைய துறைகளின் ஒத்துழைப்புடன் இப்பணியினைத் திறம்பட மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம், விவசாய நிலங்களின் வளம் கூடி, மகசூல் அதிகரிப்பதுடன், ஏரிகள், குளங்களின் நீர் சேமிக்கும் திறனும் அதிகரிக்கும்” இவ்வாறு அறிவித்து இருந்தார்.

இது தொடர்பாக, தொழில் துறையால் அரசாணை வெளியிடப்பட்டு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர்த்து மீதம் உள்ள மாவட்டங்களில் மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்ட ஏரி மற்றும் குளங்களில் இருந்து விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து, விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதன்படி நஞ்சை நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 185 கன மீட்டர் வண்டல் மண்ணும், புஞ்சை நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 222 கன மீட்டர் வண்டல் மண்ணும், ஏரி மற்றும் குளங்களில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வேளாண் பெருமக்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியினைப் பெற்று இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.

மேலும், ஏரி மற்றும் குளங்கள் அமைந்துள்ள கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கும் மற்றும் அருகிலுள்ள கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கும் இலவசமாக மண் எடுத்து வேளாண் பெருமக்கள் பயன்படுத்துவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட வேளாண் நிலங்களுக்கான 10 (1) சிட்டா அல்லது அடங்கல் நகலுடன் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

20 நாட்களுக்கு மிகாமல், ஏரி மற்றும் குளங்களில் இருந்து நிர்ணயித்த அளவில் வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்படும். ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் துறையின் சான்றிதழினைப் பெறத் தேவையில்லை.

இதன்படி அறிவிப்பு செய்யப்பட்ட ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்காக அனுமதி வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x