Published : 09 Jul 2022 04:00 AM
Last Updated : 09 Jul 2022 04:00 AM

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு உட்பட52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - மகன்கள், உறவினர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு

மன்னார்குடி / சென்னை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.44 கோடிக்கு சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், அவரது மகன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காமராஜ் மற்றும் அவர் தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத் துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.காமராஜ். தற்போது திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், நன்னிலம் தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று காலை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் வந்தனர். அப்போது வீட்டில் காமராஜ் இருந்தார். அவரிடம், சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக சோதனை நடத்த வந்துள்ளதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து காலை 6 மணி அளவில் போலீஸார் சோதனையை தொடங்கினர்.

அதேநேரத்தில், மன்னார்குடியில் உள்ள காமராஜின் சகோதரர் நடன சிகாமணி, அக்கா மகனும், அதிமுக நகரச் செயலாளருமான ஆர்.ஜி.குமார், அண்ணன் மகன் இளமுருகு, நண்பர்கள் வேட்டை திடல் சத்தியமூர்த்தி, டி.என்.பாஸ்கரன், கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் உதயகுமார், ஆலங்கோட்டை தேசபந்து, பைங்காநாடு ராதாகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் கோபி, மூவாநல்லூர் லோக அறிவழகன், வல்லூர் குட்டிமணி ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை குறித்து தகவல் அறிந்ததும், மன்னார்குடியில் உள்ள காமராஜ் வீட்டின் முன்பு அதிமுகவினர் குவிந்தனர். தமிழக அரசை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

நன்னிலத்தில் உள்ள காமராஜின் வீடு, அதிமுக பிரமுகர்கள் அன்பு, செல்வம் வீடு, திருத்துறைப்பூண்டி ராயநல்லூரில் உள்ள காமராஜின் மைத்துனர்கள் பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், அவரது நண்பர் கொக்கலாடி சந்திரகாசன், வலங்கைமான் ஒன்றியக்குழு தலைவர் சங்கர் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

தஞ்சாவூரில் உள்ள காமராஜின் சம்மந்தி மருத்துவர் மோகன் வீடு, தஞ்சாவூர் எலிசா நகரில் காமராஜின் மகன்களால் கட்டப்பட்டு, திறக்கப்படாமல் உள்ள ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிளாஸம்ஸ் ஓட்டலிலும் அதை நிர்வகித்து வரும் எம்.இளமுருகு, அய்யர் தோட்டத்தில் உள்ள ஆர்.காமராஜின் நண்பர் பாண்டியன் வீடுகளிலும் சோதனை நடத்தினர். இந்த இடங்களில் இருந்து சில முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றிச் சென்றனர்.

சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.இண்டர்நேஷனல் சர்வீசஸ் நிறுவனம், அடையாறு சாஸ்திரி நகரில் உறவினர் முத்துலட்சுமி வீடு, மயிலாப்பூரில் இயங்கி வரும் ஜிபிஏ கன்சல்டிங் நிறுவனம், போயஸ் தோட்டத்தில் உள்ள பிஎஸ்கே கட்டுமான நிறுவன உரிமையாளர் அருண்குமார் வீடு, மேற்கு அண்ணா நகரில் காமராஜின் உறவினர் தேசபந்து என்பவருக்கு சொந்தமான நிறுவனம், பனையூரில் உள்ள முத்துலட்சுமிக்கு சொந்தமான மாடர்ன் பில்டர்ஸ் லேஅவுட் ஆகிய 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் 38, சென்னையில் 6, தஞ்சாவூரில் 4, திருச்சியில் 3, கோவையில் ஓரிடம் என மொத்தம் 52 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

கடந்த 2015 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2021 மார்ச் 31 வரை ஆர்.காமராஜ் அமைச்சராக இருந்தபோது, அரசுப் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பெயரிலும் ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 அளவுக்கு சொத்து சேர்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில், அமைச்சர் ஆர்.காமராஜ், அவரது மகன்கள் எம்.கே.இனியன், எம்.கே.இன்பன், உறவினர் ஆர்.சந்திரசேகரன், நண்பர்கள் பி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.உதயகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, காமராஜ் தொடர்புடைய 52 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.41 லட்சத்து 6 ஆயிரம், 963 பவுன் நகைகள், 24 கிலோ வெள்ளி, ஐபோன், கணினி, பென் டிரைவ், ஹார்டு டிஸ்க், மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் கணக்கில் வராத ரூ.15.50 லட்சம், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை விசாரணை

காமராஜுடன் தொடர்புடைய மயிலாப்பூர் ஆடிட்டர் ஒருவரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அதே அலுவலகத்தில் மற்றொரு வழக்கு தொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறும்போது, “சம்பந்தப்பட்ட ஆடிட்டர், ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் ஆடிட்டர் என கூறப்படுவதால் கடந்த 3 நாட்களாக அவருடைய அலுவலகத்தில் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர். அவர் முன்னாள் அமைச்சர் காமராஜுக்கும் ஆடிட்டராக இருந்ததாக வந்த தகவலையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x