Published : 09 Jul 2022 07:53 AM
Last Updated : 09 Jul 2022 07:53 AM
சென்னை: கணினி அறிவியல் பாடத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலைஅண்ணா பல்கலை. வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சுமார் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. ஆண்டுதோறும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் இவை நிரப்பப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு ஆக.16 முதல் அக்.14-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவுகடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கி, நடந்து வருகிறது. இதுவரை 1.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.1 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
நடப்பு ஆண்டில் கணினி அறிவியல் படிப்புக்கு மாணவர்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளின்படி, அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி, கணினி அறிவியல் பாடத்தில் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலை. தற்போது வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் 481 கல்லூரிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
அதில், கல்லூரிகளின் பெயர், தரவரிசை,2017 முதல் 2021-ம் ஆண்டு வரை அந்த கல்லூரியின் கட்-ஆஃப் மதிப்பெண் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாக கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி வளாக கல்லூரி, கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.
இதைத் தொடர்ந்து சிவசுப்பிரமணிய நாடார் கல்லூரி, கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம் 4, 5-வது இடங்களைப் பெற்றுள்ளன. முழு பட்டியல் விவரங்களை மாணவர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் அறியலாம். இது பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT