சென்னை வானகரத்தில் அனைத்து ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் பொதுக்குழு அரங்கம்

சென்னை வானகரத்தில் அனைத்து ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் பொதுக்குழு அரங்கம்
Updated on
1 min read

சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழுவை நடத்த சென்னை வானகரத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதில்பங்கேற்க வரும் உறுப்பினர்கள் ஒரு நாள் முன்னதாகவே சென்னை வருமாறு அதிமுக அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை வானகரத்தில் கடந்தஜூன் 23-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்,தயார் நிலையில் வைத்திருந்த 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு, கட்சி அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அவர் அறிவித்தார். அதை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுகடந்த 2 நாட்களாக விசாரிக்கப்பட்டது. காரசார விவாதங்களும் நடைபெற்றன. பொதுக்குழு நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள 11-ம் தேதி (திங்கள்கிழமை) காலை9 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இருப்பினும், சென்னை வானகரத்தில் உள்ள வாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம்நடத்துவதற்கான பணிகளை இபிஎஸ் தரப்பு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர். அப்போது நத்தம் விஸ்வநாதன் கால் தவறி கீழே விழுந்ததால் சலசலப்பான சூழல் ஏற்பட்டது.

தற்போது, அந்த திருமண மண்டபம் பொதுக்குழுவுக்கு தயார்நிலையில் உள்ளது. தேவையானஇருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அலங்கார வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள கட்சி ரீதியான 75 மாவட்டங்களை சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் அமர்வதற்கான கூடங்களும் தயார் நிலையில் உள்ளன. அவர்கள் கையெழுத்திட ஏதுவாக மேஜைகளும், அமைக்கப்பட்டுள்ளன. உணவருந்தும் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

முன்கூட்டியே வரவேண்டும்

அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து வரும் பொறுப்பை அந்த்த மாவட்ட செயலர்கள் ஏற்றுள்ளனர். தேவையற்ற தாமதத்தை தவிர்க்கும் விதமாக, ஒருநாள் முன்னதாக, 10-ம் தேதியே அனைத்து உறுப்பினர்களும் சென்னை வந்துவிட வேண்டும் என்று கட்சி தலைமை அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூறும்போது, ‘‘நீதிமன்ற தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் நாங்கள் கூட்ட அரங்கை தயார் நிலையில் வைத்திருக்கிறோம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in