Published : 09 Jul 2022 06:36 AM
Last Updated : 09 Jul 2022 06:36 AM

திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்: காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு

திருவள்ளூர்/காஞ்சி/செங்கை: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலியாகவுள்ள 15 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் 1-வது வார்டு, மாம்பாக்கம் ஊராட்சித் தலைவர், பூந்தமல்லி அகரமேல் ஊராட்சி 3-வது வார்டு, மீஞ்சூர் மெதூர் ஊராட்சி 3-வது வார்டு, சோழவரம் நல்லூர் ஊராட்சி 8-வது வார்டு ஆகியவற்றின் உறுப்பினர் பதவிகளுக்கு 18 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

மாவட்டத்தில் 4 பதற்றமான வாக்குச்சாவடிகள் உட்பட 17 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 68 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் விதிமீறல்கள் சார்ந்த நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் 18 அலுவலர்கள் அடங்கிய 6 பறக்கும் படை குழுக்களும் வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு பணியில் 192 போலீஸாரும் ஈடுபட உள்ளனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் இணையவழி கண்காணிப்பும், மற்ற வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கையாக, வாக்குப் பதிவு அலுவலர்கள், வாக்காளர்களின் பயன்பாட்டுக்காக வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு உபகரணங்கள் தயாராக உள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் 3 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 12 பேர் போட்டியிடுகின்றனர். இங்கும் தேர்தல் ஏற்பாடுகள் முடிந்து தயார் நிலையில் வாக்குச் சாவடிகள் உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டுகளான காட்டாங்கொளத்தூர் 10-வது வார்டு, மதுராந்தகம் 15-வது வார்டுக்கும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு திம்மாவரம் 4-வது வார்டு, பொன்பதிர்கூடம் 2-வது வார்டு, திரிசூலம் 1-வது வார்டு, நன்மங்கலம் 1-வது வார்டு ஆகிய பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்காக 40 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

3 மாவட்டங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள வாக்காளர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் 12-ம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x