

மாமல்லபுரம்: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக பல்லவ மன்னர்களின் வரலாறு, குடவரை சிற்பங்கள் மற்றும் சுற்றுலா தலங்களின் சிறப்புகளை டிஜிட்டல் திரை அமைத்து ஒளிபரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த 2019-ல் கடற்கரை கோயில் வளாகத்தில் நவீன டிஜிட்டல் திரை அமைத்து பல்லவ மன்னர்கள் மற்றும் குடவரை சிற்பங்களின் வரலாற்றுச் சிறப்புகள் குறித்து தொல்லியல் துறை ஒளிபரப்பு செய்தது. ஆனால் இது நீடிக்கவில்லை. நிர்வாக காரணங்களுக்காகவும் அடுத்து வந்த கரோனா தொற்று சூழ்நிலையாலும் டிஜிட்டல் திரை அகற்றப்பட்டது.
இந்நிலையில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள நிலையில், முக்கிய இடங்களில் மீண்டும் டிஜிட்டல் திரை அமைத்து மாமல்லபுரத்தின் சிறப்புகளை ஒளிபரப்ப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.