

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் நுழைய வாய்ப்புஉள்ளதால், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தி, சென்னை காவல் ஆணையரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மனு அளித்தார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், மாறி, மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் நேற்று மாலை மனு அளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், சமூக விரோதிகள் அத்துமீறி நுழைய இருப்பதாக, நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே, உரிய பாதுகாப்பு கேட்டு, மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்று நாங்கள் 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறார் என்று சசிகலா முன்பு சொன்னதை மறுக்க முடியுமா?
திமுக ஆதரவாளர்கள்தானே?
வாழ்நாள் முழுவதும் திமுகவைஎதிர்க்க வேண்டும் என்று எம்ஜிஆர், ஜெயலலிதா கூறியதுதான், எங்கள் மனதில்உள்ளது.ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துதெரிவிக்கிறார். எனவே, அவர்கள்(ஓ.பன்னீர்செல்வம் தரப்பு) திமுகஆதரவாளர்கள்தானே? அதிமுகவுக்கு எதிரிகள்தானே? இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.