

சென்னை: தினசரி வாடகையாக ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வசூலிக்கும் ஓட்டல் அறைகளின் மீது 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் வலியறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.வெங்கடசுப்பு, கவுரவ செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமீபத்தில் நடைபெற்ற 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தினசரி வாடகையாக ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வசூலிக்கும் ஓட்டல் அறைகளின் மீது 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு குறைந்த வாடகையில் சேவை வழங்க வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற லாட்ஜ்கள் பலவற்றில் தனி கழிப்பறை, குளியலறை அமைக்கப்படாமல் பொதுவான கழிப்பறை, குளியலறை வசதி மட்டுமே உள்ளது. இத்தகைய அறைகளுக்கு தினசரி வாடகை ரூ.300 முதல் ரூ.400 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
கிராமப்புற மாணவர்கள்...
தேர்வு எழுதவும், நேர்முகத் தேர்வுக்காகவும் கிராமப் பகுதிகளிலிருந்து வரும் மாணவர்கள், சிற்றூர்களிலிருந்து மேல் சிகிச்சைகாக அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுடன் வரும் உறவினர்கள், புனிதத் தலங்களுக்கு சுற்றுலா வரும் நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர யாத்ரீகர்கள் போன்றோர் இதுபோன்ற அறைகளை பெரிதும் பயன்படுத்துகின்றனர்.
வரி விலக்கு
இத்தகையோருக்கு 12 ஜிஎஸ்டிவிதிக்கும் முடிவு பாதிப்பை ஏற்படுத்தும். பல்வேறு மாநில அரசுகளின் ஆடம்பர வரிச் சட்டத்திலேயே இதுபோன்ற ஓட்டல்களின் அறைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
எனவே ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக கட்டணம் வசூலிக்கும் ஓட்டல் அறைகளுக்கு வரிச்சலுகையை ரத்து செய்யும் முடிவையும், 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கும் தீராமானத்தையும் திரும்பப் பெற வேண்டுகிறோம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.