Published : 09 Jul 2022 06:00 AM
Last Updated : 09 Jul 2022 06:00 AM
மதுரை: நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்தை தடுப்பது குறித்து உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரஷீத், உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க சிபிஐயை எதிர்மனுதாரராக சேர்த்து, சில கேள்விகளுக்கு சிபிஐ பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில், "நீட் தேர்வு மையத்தில் ஒவ்வொரு தேர்வரையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். மேலும் தேர்வு மையத்தில் அறை கண்காணிப்பாளர், தேர்வரின் புகைப்படமும், அனுமதி சீட்டில் உள்ள புகைப்படமும் சரியாக உள்ளதா? எனச் சரி பார்க்க வேண்டும்.
மேலும் கண் விழித்திரை பதிவு மற்றும் விண்ணப்பிக்கும்போது, தேர்வு மையம் மற்றும் கலந்தாய்வு என 3 இடங்களில் கைரேகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும். ஃபேஸ் டிடெக்டர் போன்ற நவீன கருவிகள் மற்றும் மென்பொருட்களை பயன்படுத்தி நீட் தேர்வில் முறைகேடு நடக்காமல் தவிர்க்கலாம். தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து சோதனை முறைகளை எளிதாக்கியும் கண்காணிப்பை தீவிரப்படுத்தலாம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி, மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு என்பது மிக முக்கியமானது. இதில் முறைகேடு மற்றும் ஆள் மாறாட்டம் நடைபெறாமல் இனி வரும் காலங்களில் கண்டிப்பாக தடுக்க வேண்டும். இது போன்ற முறைகேடுகள் நடக்காமல் கண்காணிப்பது நமது கடமை. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் முறைகேடு நடைபெறாமல் இருக்க என்னென்ன நவீன வழிமுறைகள் பின்பற்றப்பட உள்ளன? என்பது குறித்து சிபிஐ, சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT