Published : 09 Jul 2022 06:39 AM
Last Updated : 09 Jul 2022 06:39 AM
விருத்தாசலம்: கடலூர் அரசுப் பேருந்தில் பயணி தவறவிட்ட ரூ.1.51 லட்சத்தை பத்திரமாக மீட்டு நடந்துநர் ஒப்படைத்தார்.
பண்ருட்டி வட்டம் வீரசிங்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிறு முந்திரி வியாபாரி முனுசாமி. இவர் திருச்சியில் முந்திரி விற்பனை செய்துவிட்டு, நேற்று அதிகாலை திருச்சியிலிருந்து கடலூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். பெரம்பலூரில் தேநீர் அருந்த பேருந்து நின்றபோது, முனுசாமி பேருந்தில் இருந்து இறங்கி, இயற்கை உபாதைக்கு சென்றார். முனுசாமி வருவதற்குள் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
அப்போது, பேருந்தில் பயணியின்றி பை மட்டும் இருப்பதை அறிந்த நடத்துநர் வேல்முருகன், இதர பயணிகளிடம் பை குறித்து விசாரித்துள்ளார். யாரும் அதை வாங்க முன்வரவில்லை.
இதையடுத்து பையை சோதனையிட்டதில், அதில் ரூ.1.51 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த பையை நடத்துநர் வேல்முருகன், விருத்தாசலம் அரசுப் பேருந்து பணிமனை மேலாளர் நவநீதனிடம் ஒப்படைத்தார். பின்னர் நடத்துநர், மேலாளர் உள்ளிட்டோர் அந்தப் பணப்பையை விருத்தாசலம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயினிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையை பையை பறிகொடுத்த முனுசாமி விருத்தாசலம் பணிமனைக்குச் சென்று விசாரித்துள்ளார். பணிமனை அதிகாரிகள் அவரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, காவலர்கள் முன்னிலையில் பணத்தை முனுசாமியிடம் ஒப்படைத்தனர். நடத்துநரின் நற்பண்பை காவல்துறையினரும், போக்குவரத்து துறையினரும் பாராட்டி கவுரவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT