

மதுரை: பள்ளி மாணவரிடம் சாதி குறித்து போனில் பேசிய ஆசிரியைகள் மீது 2 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பொன்.காந்திமதிநாதன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகள் கலைச்செல்வி, மீனா ஆகியோர் மாணவர் ஒருவருடன் மொபைல் போனில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு ஆசிரியர் குறித்துப் பேசியது சமூக வலைதளங்களில் பரவியது.
அந்தக் குரல் பதிவில் ஆசிரியை கள் இருவரும் மாணவர் மனதில் சாதிப் பாகுபாட்டை உருவாக்கும் வகையில் பேசியு ள்ளனர்.
இதையடுத்து இரு ஆசிரியை களும் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். ஆனால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஐ.பினேகாஸ் வாதிட்டார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
அப்போது நீதிபதி, குற்றவியல் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு வழக்கறிஞர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரித்து வருகிறார், என்றார்.
இதையடுத்து நீதிபதி, காவல் கண்காணிப்பாளர், விளாத்திகுளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மேற்பார்வையில் குளத்தூர் காவல் ஆய்வாளர் 2 மாதத்தில் விசாரணையை முடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.