Published : 09 May 2016 08:45 AM
Last Updated : 09 May 2016 08:45 AM

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து பிடிபட்டால் உடனடி சிறை: ராஜேஷ் லக்கானி

மண்டல குழுக்களும் பறக்கும் படைகளாக மாற்றம்; தொகுதிக்கு 25 பறக்கும் படைகள்- 12-ம் தேதி முதல் தீவிர ரோந்து



*

தேர்தல் பணப் பட்டுவாடாவை தடுக்க, தொகுதிகளின் மண்டல குழுக்களும் 12-ம் தேதி முதல் பறக்கும் படை குழுவாக செயல்படும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து பிடிபட்டால், உடனடி யாக சிறையில் அடைக்கப்படுவார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாக வும் நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக தேர்தல் துறை செய்து வருகிறது.

தமிழக தேர்தலில் வாக்காளர் களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில், முதல் முறையாக அதிகமாக செலவு செய்வதாக சந்தேகிக்கப்படும் முக்கிய தலைவர்கள், முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தனித்தனி செலவினப் பார்வையாளர்களையும் நியமித் துள்ளது.

இந்நிலையில், கடைசி நேர பணப் பட்டுவாடாவை முழுமையாக தடுக்க, தொகுதிகளில் உள்ள மண்டல குழுக்களையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

தேர்தல் தொடர்பான சோதனை பணிகளுக்காக ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் உட்பட ஆயிரத்து 416 குழுக்கள் உள்ளன. பணப்புழக்கம் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்ட 94 தொகுதிகளில், பறக்கும் படைகள் எண்ணிக்கை 3-ல் இருந்து 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தற்போது பறக்கும் படைகள் 985 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ஏற்கெனவே தொகுதி களில் பணியில் இருக்கும் 20 மண்டல குழுக்களும், பறக்கும் படைகளாக மாற்றப்படுகின்றன. இந்த குழுக்களில் ஒரு வட்டாட்சியர், 3 மாநில அரசு ஊழியர்கள், ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் நுண் பார்வையாளர் ஆகியோர் இருப்பர். இக்குழுக்கள் 12-ம் தேதி முதல் தொகுதி முழுவதும் ரோந்து சுற்றி, சோதனைகளில் ஈடுபடும். இதன் மூலம், தொகுதியில் 25-க்கும் மேற்பட்ட குழுக்கள் இருக்கும். புகார் வந்தால் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்வார்கள். வரும் 9 மற்றும் 10 தேதிகளில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் படம், பெயர், சின்னம் ஆகியவற்றை பொருத்தும் பணி தொடங்கும்.

தமிழகம் முழுவதும் தேர்தல் விதிகளை மீறி, கொண்டு செல்லப்பட்ட ரூ.87 கோடி ரொக்கம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்குக்கு பணம் கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால், கொடுத்தவர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு தபால் வாக்குச் சீட்டு அளிக்கும் பணிகள் 7-ம் தேதி முதல் தொடங்கியது. ராமநாதபுரம் தவிர மற்ற மாவட்டங்களில் தபால் வாக்குகள் அதிக அளவில் பதிவாகி யுள்ளன. சென்னையில் 61 சதவீத தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணும் 19-ம் தேதி அன்று காலைக்குள் தபால் வாக்குகளை அனுப்ப வேண்டும்.

வாக்காளர்களுக்கு தினசரி 10 முதல் 15 சதவீதம் பூத் சிலிப்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 10-ம் தேதிக்குள் (நாளை) பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x