Published : 09 Jul 2022 06:54 AM
Last Updated : 09 Jul 2022 06:54 AM
வேலூர்: வேலூர் புதுவசூர் தீர்த்தகிரி மலைப்பகுதியில் ரூ.2 கோடியில் 50 ஹெக்டேர் பரப்பளவில் நகர்வனம் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு 75 மாவட்டங்களில் தலா ரூ.2 கோடி மதிப்பில் நகர்வனம் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. நாடு முழுவதும் இந்த திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த திட்டத்தில் தலா 50 ஹெக்டேர் பரப்பளவில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அலமேலுமங்காபுரம் காப்புக்காட்டுக்கு உட்பட்ட புதுவசூர் தீர்த்தகிரி மலைப்பகுதியில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது, மண்டல வன பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ்குமார், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், உதவி வன அலுவலர் முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், வேலூர் சரக வனஅலுவலர் ரவிக்குமார் நன்றி தெரிவித்தார்.
அழகான வனப்பகுதி:
நகர்வனம் திட்டத்தில் 50 ஹெக்டேரில் சரக்கொன்றை, மயில்கொன்றை, மரமல்லி, புன்னை உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க உள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட 50 ஹெக்டேர் பரப்பளவு இடத்தை பாதுகாப்பு வேலி அமைத்து நடைபாதை, யோகா மையம், மலை உச்சியில் இருந்து வேலூர் நகரத்தை பார்க்கும் பார்வையாளர் முனை, நகர்வன பகுதிக்கு உட்பட்ட இடத்தில் தேவை இருக்கும் இடத்தில் தடுப்பணை உள்ளிட்டவை ஏற்படுத்த உள்ளனர்.
சரக்கொன்றை, மயில்கொன்றை மரங்களால் கோடை காலத்தில் நெடுஞ்சாலையில் இருந்து மலைப்பகுதியை பார்க்கும்போது பல வண்ணங்களாக காட்சியளிக்கும் என்று கூறப்படுகிறது. 20 ஆயிரம் மரக்கன்றுகள் வனத்துறையின் நர்சரிகளில் வளர்க்கப்பட்டு மழைக்காலம் தொடங்கும் நேரத்தில் நடவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT