

பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமல்லாமல் நீதிமன்றங்கள், தனியார் பெரு நிறுவனங்களில் பதவி உயர்வுகளில் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பல அரசு பொதுத்துறை நிறுவனங்கள் சரிவர கடைபிடிப்பதில்லை.
பல்வேறு நிறுவனங்களில் நிரப்பப்படாமல் எஞ்சியிருக்கும் பணி முழுமையாக நிரப்பப்பட வேண்டும். இதை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் மசோதாவாகக் கொண்டு வர வேண்டும் என தமாகா சார்பில் வலியுறுத்துகிறேன்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.