

ஓசூர்: ஓசூர் நகரில் மாநிலத்திலேயே முதல் முறையாக அரசு ஒத்துழைப்புடன் புத்தகத் திருவிழா குளிர்சாதன வசதியுடன் கோலாகலமாக தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ஓசூரில் 11-வது புத்தகத் திருவிழா ஹில்ஸ் ஹோட்டல் அரங்கில் இன்று காலை 10.3 0மணியளவில் தொடங்கியது.
இந்த தொடக்க நிகழ்வுக்கு புத்தகத் திருவிழா குழு தலைவர் அறம்கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். கோட்டாட்சியர் தேன்மொழி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் முனைவர் சேதுராமன் புத்தகத்திருவிழா நோக்கம் மற்றும் அறிமுக உரையாற்றினார். இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து புத்தக அரங்குகளை எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
பர்கூர் எம்எல்ஏ மதியழகன், ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா, பிஎம்சி கல்வி குழும தலைவர் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி பேசும்போது, ''தமிழகத்தில் அரசு உதவி பெற்ற முதல் புத்தகத் திருவிழா என்ற பெருமை ஓசூர் புத்தகத் திருவிழாவுக்கு கிடைத்துள்ளது. மனிதனின் முதல் அடையாளம் பேச்சு. நாம் நேரடியாக பேசினால் 10 அல்லது 100 பேருக்கு மட்டுமே நம்முடைய பேச்சை கேட்க முடியும்.
ஆனால் பல லட்சக்கணக்கான மனிதர்களிடம் நமது பேச்சு மற்றும் கருத்துக்களை கொண்டு செல்வது புத்தகத்தால் மட்டுமே முடியும். புத்தகத்தை வாசிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி, கணினியில் வாசிக்கும் போது வராது. புத்தக வாசிப்பு கண்களுக்கும் இதமானது. ஏதாவது ஒரு புத்தகத்தை வாசிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள், அது உங்களுடைய அறிவுத்திறனை மேம்படுத்தும்'' என்று ஆட்சியர் கூறினார்.
ஓசூர் புத்தகத்திருவிழாவில் 100 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்து தமிழ் திசை, சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட், பாரதி பதிப்பகம், சிக்ஸ்த் சென்ஸ், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன புத்தகங்கள், நியூ சென்சுரி புக் ஹவுஸ், ஸ்ரீராமகிருஷ்ணா மடம் பதிப்பகம் உள்ளிட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இலக்கியம், வரலாறு, அறிவியல், பொறியியல், மருத்துவம், பண்பாடு, அரசியல், சமூகம், ஆன்மிகம், சமையல், உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தகத்திருவிழாவில் அரங்கு எண்-53ல் இந்து தமிழ் திசை பதிப்பகம் வெளியீடான தமிழ், ஆங்கிலம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கோளரங்கம்: மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை துண்டும் வகையிலும், ஒரே இடத்தில் அனைத்து கோள்களைப் பார்த்து அறிந்து கொள்ளும் வகையிலும், இந்த புத்தகத் திருவிழாவில் கோளரங்கம் பார்வைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று(8-ம்தேதி) தொடங்கிய இந்த புத்தகத் திருவிழா வருகிற 19-ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 11 மணிக்கு ஆரம்பித்து இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. மாலையில் பல்துறையில் அனுபவம் வாய்ந்த பிரபலங்களின் சிறப்புரையும், கலை நிகழ்ச்சிகளும், ஓவியப்போட்டி, கதை எழுதும் போட்டி, குழந்தைகளுக்கான சங்கமம், மகளிர் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
தினமும் அரசுப்பள்ளி மாணவர்களை புத்தகத் திருவிழாவுக்கு அழைத்து வர பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தொடக்க விழாவில் ஓசூர் துணை மேயர் ஆனந்தைய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் கவாஸ்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.