முன்னாள் அமைச்சர் காமராஜின் மகன் தங்கியிருந்த வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

கோவையில் சோதனை நடத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் காமராஜின் மகன் இன்பன் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகம். | படம்: ஜெ.மனோகரன்.
கோவையில் சோதனை நடத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் காமராஜின் மகன் இன்பன் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகம். | படம்: ஜெ.மனோகரன்.
Updated on
1 min read

கோவை: கோவையில் முன்னாள் அமைச்சர் காமராஜின் மகன் தங்கியிருந்த வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காமராஜ். அதிமுக முன்னாள் அமைச்சர். இவரது மகன் இன்பன். மருத்துவரான இவர் கோவை அவிநாசி சாலை, லட்சுமி மில் சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக கடந்த சில மாதங்களாக பணியாற்றி வருகிறார்.

பீளமேட்டை அடுத்த சவுரிபாளையத்தில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் வழித்தடத்தில் கண்ணபிரான் மில் அருகே அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்குள்ள தனக்கு சொந்தமான பிளாட்டில் தங்கியிருந்து காமராஜின் மகன் இன்பன் மருத்துவமனை பணிக்கு சென்று வருகிறார்.

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று (ஜூலை 8) திடீர் சோதனை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள அவரது மகன் இன்பன் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு இல்லத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று சோதனை நடத்தினர்.

கூடுதல் எஸ்.பி திவ்யா தலைமையில் 7 பேர் அடங்கிய கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று அதிகாலை இன்பன் வீட்டுக்கு வந்து சோதனையைத் தொடங்கினர்.

இந்த சோதனை மாலை வரை நடந்தது. சோதனையில் அங்கிருந்த சில ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியதாகவும், அது தொடர்பாக இன்பனிடம் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in