Published : 08 Jul 2022 02:18 PM
Last Updated : 08 Jul 2022 02:18 PM
சென்னை: செப்டம்பர் மாதத்துடன் 35.52 லட்சம் கரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளதால், 59 வயது வரை உள்ளவர்களுக்கு அரசு மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை வைத்தார்.
கொசுக்களால் பரவும் நோய்கள் கட்டுப்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக்.எல்.மாண்டாவியா தலைமையில் காணொலி மூலம் நடைபெற்றது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இருந்து கலந்து கொண்டார்.
இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "தமிழக அரசு கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா, யானைக்கால் நோய் , ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டில் 2866 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள், ரத்தம் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
21,000 பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் தினமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். கொசுப் புகை இயந்திரம் மற்றும் பூச்சுக்கொல்லிகள் போதுமான அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. மலேரியா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்துக் கொண்டு வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 140 நபர்கள் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மலேரியா தொற்று இல்லாத நிலை உள்ளது. மலேரியா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களாக சென்னை, இராமநாதபுரம், தருமபுரி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகியவை உள்ளது. இந்த நோயை முற்றிலும் ஒழிக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளது. தமிழ்நாடு அரசு யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000 வழங்கி வருகிறது. இதுவரை 8023 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். ரூபாய் 9.63 கோடி இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 13 நபர்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கான தடுப்பூசி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், மதுரை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கரூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களில் போடப்படுகிறது. 9 முதல் 12 மாதக் குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 16 முதல் 24 மாதக் குழந்தைகளுக்கு 2 வது தவணை தடுப்பூசியும் போடப்படுகிறது. இந்தப் பணி 90 சதவீதத்திற்கு மேல் முடிக்கப்பட்டுள்ளது.
மழை பருவகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே, கொசுக்களின் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக அனைத்து தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் தேதியின் நிலவரப்படி தமிழ்நாட்டில் 78,78,980 கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. செப்டம்பர் 2022 அன்றுடன் 35.52 லட்சம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளன. எனவே, இந்த தடுப்பூசிகள் வீணாவதை தடுக்க ஒன்றிய அரசு 18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு தனியார் கொரோனா தடுப்பூசி மையத்தை தவிர்த்து அரசு கொரோனா தடுப்பூசி மையத்திலேயே இலவசமாக தடுப்பூசியை செலுத்த அனுமதிக்க வேண்டும்" என்று அமைச்சர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT