லாலு பிரசாத் யாதவ் விரைவில் குணமடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் விரைவில் குணமடைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் , தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்து வருந்துகிறேன்.

தனது தந்தையாரின் உடல்நிலை சீராக உள்ளது என்று தேஜஸ்வி யாதவ் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது.அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக,பிஹாரில் கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் தலைநகர் பாட்னாவில் உள்ள வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் மாடிப்படியில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவும் முதுகில் காயமும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பாட்னா தனியார் மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கெனவே சிறுநீரகக் கோளாறு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது எலும்பு முறிவு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் அனுமதியை லாலு பிரசாத் யாதவ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in