

திமுகவில் இருந்து விலகுவதாக நடிகை குஷ்பு திடீரென அறிவித்துள்ளார். இதுகுறித்து கட்சித் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரபல நடிகை குஷ்பு சுந்தர், கடந்த 2010 மே 14-ம் தேதி கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார். கட்சியின் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்ட குஷ்பு, தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார். கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஸ்டாலின் குறித்து இவர் அளித்த பேட்டி சர்ச்சைக்குள்ளானது. திருச்சிக்கு சென்ற அவர் மீது, திமுகவினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீடும் தாக்கப்பட்டது. ஆனாலும், அவர் திமுகவிலேயே நீடித்தார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட குஷ்பு வாய்ப்பு கேட்டதாகவும் கூறப்பட்டது. அதை குஷ்பு மறுத்தாலும், சீட் கிடைக்காததில் அவர் அதிருப்தியில் இருந்த தாகவே தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், கட்சியிலிருந்து விலகுவதாக, திமுக தலைவர் கருணாநிதிக்கு குஷ்பு திங்கள் கிழமை கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
திமுகவில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறை வேற்றியதை பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரை அறிவர். ஆனால் என் அர்ப்பணிப்பும் உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை திமுகவில் உள்ளபோது, நான் தேர்ந்தெடுத்த பாதையும் பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே திமுகவிலிருந்தும் அதன் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திமுகவிலிருந்து விலகிய குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நான் எந்தக் கட்சிக்கும் தாவவில்லை. எனவே யாரும் அப்படி கற்பனை பண்ண வேண்டாம். கருணாநிதி எனக்கு தந்தை போன்றவர். அதைத் தாண்டி வேறு எதையும் எண்ணியதில்லை. தற்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட சூழலில் இருக்கிறேன். ஆகவே, என்னை எனது குடும்பத்துடன் தனியாக இருக்க விடுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.