Published : 08 Jul 2022 04:51 AM
Last Updated : 08 Jul 2022 04:51 AM
சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் செலவினங்களைக் குறைக்க, தேவைக்கேற்ப உரத்தை வாங்கி பயன்படுத்தும்படி வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நடப்பாண்டில், பருவமழை மிகவும் சாதகமானதாக இருப்பதாலும், மேட்டூர் அணை முதன்முறையாக, வழக்கத்துக்கு முன்னதாகவே மே 24-ம் தேதியே திறக்கப்பட்டதாலும், நடப்பு குறுவைப் பருவத்தில் வழக்கத்தை விட 5.2 லட்சம் ஏக்கருக்கும் மேல் நெல் சாகுபடி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, டெல்டா விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் அனைத்து ரசாயன உரங்களும் உரிய காலத்தில் தங்கு தடையின்றி விநியோகிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை மையங்களில் 25,310 டன் யூரியா, 20 ஆயிரம் டன் டிஏபி, 13,360 டன் பொட்டாஷ் மற்றும் 34,430 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளன
முதல்வர் அறிவித்த குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ், ஏக்கருக்கு ரூ.2,466.50 மதிப்புள்ள ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டிஏபி, அரை மூட்டை பொட்டாஷ் ஆகிய உரங்கள் முழு மானியத்தில் 1.90 லட்சம் ஏக்கர் பரப்புக்கு வழங்க வேளாண் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
காக்கிநாடா மற்றும் கிருஷ்ணாப்பட்டினம் துறைமுகத்துக்கு வந்துள்ள இறக்குமதி டிஏபி உரத்தில் தமிழகத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் உரம் வழங்க வேளாண் இயக்குநர், ஐபிஎல், கோரமண்டல் உர நிறுவனங்களிடம் கேட்டார். இதையடுத்து ஜூன் 25-ம் தேதி வந்த சரக்கு கப்பலில் இருந்து 10 ஆயிரம் டன் யூரியாவை கூடுதல் ஒதுக்கீடாக வழங்கியுள்ளது.
சிறப்பு கண்காணிப்புப் படை
தற்போது சாகுபடிப் பரப்பு அதிகமாகும் என எதிர்பார்ப்பதால், தமிழகத்தில் உரப் பதுக்கல், செயற்கையாக உரப் பற்றாக்குறை உருவாக்குதல் மற்றும் உரத் தட்டுப்பாடு ஏதும் நிகழாதபடி, மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்புப் படைகள் அமைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ள மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டங்களின் தேவைக்கேற்ப ரசாயன உரங்களை இருப்பு வைத்து விநியோகம் செய்ய தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. செலவினத்தைக் குறைக்க, விவசாயிகளும் பயிரின் தேவைக்கேற்ப உரம் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT