Published : 08 Jul 2022 04:24 AM
Last Updated : 08 Jul 2022 04:24 AM
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 20 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். உயர்கல்வித் துறை சார்பில் ரூ.152 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உயர்கல்வியை அனைவரும் பெறும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட்டு, பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இலவச கல்வித் திட்டம், முதல் தலைமுறை பட்டதாரி சலுகைகள், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை, பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு நிதியுதவி போன்ற அரசின் நலத் திட்டங்களால் தேசிய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது.
கடந்த 2021-22 நிதியாண்டுக்கான உயர்கல்வி மானியக் கோரிக்கையின்போது, தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்கவும், மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளக்குறிச்சி - திருக்கோவிலூர், ஈரோடு - தாளவாடி, திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி - மானூர், திருப்பூர்- தாராபுரம், தருமபுரி- ஏரியூர், புதுக்கோட்டை - ஆலங்குடி, திருவாரூர் - கூத்தாநல்லூர், வேலூர் - சேர்க்காடு ஆகிய இடங்களில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 2022-23 நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது, திருச்சி - மணப்பாறை, விழுப்புரம் - செஞ்சி, கிருஷ்ணகிரி - தளி, புதுக்கோட்டை - திருமயம், ஈரோடு - அந்தியூர், கரூர் - அரவக்குறிச்சி, தஞ்சாவூர் - திருக்காட்டுப்பள்ளி, திண்டுக்கல் - ரெட்டியார்சத்திரம், கடலூர் - வடலூர், காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரும்புதூர் ஆகிய இடங்களில் புதிதாக 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, புதிதாக அறிவிக்கப்பட்ட 20 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டு முதல் மாணவ, மாணவிகள் சேர்ந்து பயன்பெறும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக கட்டிடங்களில் இக்கல்லூரிகளை சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
புதிய கட்டிடங்கள்
இதுதவிர, சென்னை சைதாப்பேட்டை யில் ரூ.10 கோடியில் கல்லூரி கல்வி இயக்குநரக கட்டிடம், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் ரூ.7.48 கோடியில் முதுநிலை மாணவர்களுக்கான விடுதி கட்டிடங்கள், சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.3 கோடியில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடம், தருமபுரி பூமாண்ட அள்ளி பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.11 கோடியில் கட்டப்பட்டுள்ள முதுகலை பட்டப்படிப்பு விரிவாக்க மையம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.12.5 கோடியில் கட்டப்பட்டுள்ள அறிவியல் கருவியாக்க மையம், தொழில் முனைவோர் புதுமை மையம், கல்விசார் கட்டிடங்களையும் முதல்வர் திறந்துவைத்தார்.
ரூ.152 கோடியில்...
உயர்கல்வித் துறை சார்பில் மொத்தம் ரூ.152 கோடியே 1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உயர்கல்வித் துறை செயலர் தா.கார்த்திகேயன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் க.லட்சுமி பிரியா, கல்லூரிக் கல்வி இயக்குநர் எம்.ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT