Published : 28 May 2016 10:24 AM
Last Updated : 28 May 2016 10:24 AM

அரவக்குறிச்சி, தஞ்சையில் தேர்தல் எப்போது?- ஆளுநரின் பரிந்துரை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என தகவல்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் ஜூன் 1-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஆளுநர் கே.ரோசய்யாவின் பரிந்துரை குறித்து விரைவில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மே 16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறி வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் மே 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தது. பின்னர் இந்த 2 தொகுதிகளிலும் ஜூன் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் வரும் ஜூன் 1-ம் தேதிக்குள் தேர்தல் நடத்துமாறு ஆளுநர் கே.ரோசய்யா பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் (மே 26) ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர் தொகுதியில் தேர்தலை தள்ளிவைப்பது என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுக வேட்பாளர்கள் வி.செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), எம்.ரெங்கசாமி (தஞ்சாவூர்) ஆகியோர் கடந்த 22-ம் தேதி ஆளுநர் ரோசய்யாவிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன் கடந்த 23-ம் தேதி ஆளுநர் ஆலோசனை நடத்தினார். தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை மே 24-ம் தேதி ராஜேஷ் லக்கானி ஆளுநரிடம் அளித்தார்.

தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த 2 தொகுதிகளிலும் ஜூன் 1-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த பரிந்துரை செய்வதாக தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதிக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘ஆளுநர் தனது பரிந்துரையை தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதிக்கு அனுப்பியுள்ளார். ஏற்கெனவே அறிவித்தவாறு ஜூன் 13-ம் தேதி தேர்தல் நடத்துவதா அல்லது ஆளுநரின் பரிந்துரைப்படி ஜூன் 1-ம் தேதிக்கு முன்பாக நடத்துவதா என்பது குறித்து நசீம் ஜைதி விரைவில் முடிவெடுப்பார்’’ என தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆளுநர் கே.ரோசய்யா அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

டெல்லியில் ஆலோசனை

இந்நிலையில், டெல்லி சென்றுள்ள தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x