Published : 08 Jul 2022 06:04 AM
Last Updated : 08 Jul 2022 06:04 AM

குற்றச்செயல்களை தடுக்க வெளிநாட்டு பாணியில் போலீஸ் ரோந்து பணியில் ட்ரோன்கள்: கழுகு பார்வை கண்காணிப்பு தொடங்கப்பட்டது

சென்னை: காவல் துறை ரோந்துப் பணியில் ட்ரோன்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் போலீஸார் கழுகுப் பார்வை கண்காணிப்பை தொடங்கியுள்ளனர்.

சென்னையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்பட்டன.

அதன்படி, சென்னையில் தற்போது சுமார் 2.80 லட்சம் கேமராக்கள் உள்ளன. சுமார் 80 சதவீத வழக்குகளில் துப்பு துலக்குவதற்கு கண்காணிப்பு கேமராக்களே பெரிதும் உதவுகின்றன.

முக அடையாள மென்பொருள்

அடுத்த கட்டமாக கூட்டத்தில்இருக்கும் குற்றவாளிகளைக் கூட, துல்லியமாக அடையாளம் காணும் வகையில் முக அடையாள மென்பொருளை (சிசிடிஎன்எஸ்) போலீஸார் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். அடுத்ததாக செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் படிப்படியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த கேமராக்கள் வெறும் காட்சிகளை மட்டுமல்லாது ஒருவரது உணர்வுகளையும் அறியும் வசதி கொண்டவை. குற்றச் சம்பவம் நிகழ்வதற்குரிய சூழல் ஓர் இடத்தில் ஏற்பட்டால், அதை முன்னரே கண்டறிந்து உடனே எச்சரிக்கும் திறனும் இந்த கேமராக்களுக்கு உண்டு.

பாதுகாப்பு கண்காணிப்பு

அடுத்த கட்டமாக சட்டம் - ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கும் வகையிலும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசல், கும்பல் மோதல், சாலை மறியல், ஆர்ப்பாட்டம், முதல்வர், வெளிநாட்டு தலைவர்கள், முக்கிய அரசியல் பிரபலங்களின் வழித்தட பாதுகாப்பு கண்காணிப்பு உட்பட பல்வேறு வகையான செயல்பாடுகளை உடனடியாக கண்டறியவும், நிகழ்விட தன்மையை படம் பிடிக்கவும் போலீஸார் ட்ரோன்களை பயன்படுத்த உள்ளனர்.

ரோந்து வாகனங்களை பயன்படுத்துவதுபோல் இனி போலீஸார் வெளிநாட்டு பாணியில் ரோந்து ட்ரோன்களை பறக்கவிட்டு கழுகுப் பார்வை கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

அரசுக்கு கடிதம்

முதல் கட்டமாக பரிசோதனைமுறையில் ஒரு ட்ரோன் மூலம் போலீஸார் சோதனை முயற்சியை மேற்கொண்டுள்ளனர். பழுதடைந்த நிலையில் உள்ள மேலும் 2 ட்ரோன்களை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

மேலும், சென்னை முழுவதும் இதேபோல் ரோந்துப் பணியில் ஈடுபட தேவையான புதிய ட்ரோன்களை வழங்கக் கோரி அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகளில் தடையை மீறி குளிப்பவர்களை அடையாளம் காணவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x