

ரூ.30 லட்சம் கேட்டு மும்பையில் கடத்தப்பட்ட சென்னை ரியல் எஸ்டேட் அதிபரை போலீஸார் மீட்டனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பகுதியை சேர்ந்தவர் சோகன்லால் (45). ரியல் எஸ்டேட் அதிபர். “மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரபல சாமியார் ஒருவருக்கு ஆசிரமம் அமைக்க சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 100 ஏக்கர் நிலம் தேவை” என்று சோகன்லாலிடம் மும்பையில் வசிக்கும் அவரது நண்பர் கூறியிருக்கிறார். 50 ஏக்கர் நிலத்தை தயார் செய்த சோகன்லால் அது தொடர்பான ஆவணங்களை எடுத்துக்கொண்டு சாமியாரை பார்க்க மும்பை சென்றுள்ளார். உடன் தனது நண்பர் சசிக்குமார் என்பவரையும் அழைத்து சென்றுள்ளார்.
சோகன்லால், சசிக்குமார் இருவரும் கடந்த 10-ம் தேதி மும்பை சென்றனர். அவர்களை ஒரு கும்பல் லத்தூர் பகுதியில் ஒரு பங்களாவுக்குள் அடைத்து வைத்து துப்பாக்கி முனை யில் மிரட்டியுள்ளனர். ‘‘ரூ.30 லட்சம் கொடுத்தால்தான் உங்களை விடு விப்போம். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம்’’ என்றும் தெரி வித்துள்ளனர். இதையடுத்து சோகன்லால், கடந்த 12-ம் தேதி தனது தந்தை மங்கள்ராமுக்கு போன் செய்து விவரத்தை கூறி ரூ.30 லட்சம் ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்திருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மங்கள்ராம், கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
கானத்தூர் காவல் ஆய்வாளர் பாலன், உதவி ஆய்வாளர் செந்தில், ஏட்டுகள் செந்தில்குமரன், மகேஷ், சதீஷ்குமார், அகிலேந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் மும்பைக்கு சென்று உள்ளூர் போலீஸாரின் உதவியை நாடினர். பின்னர் ரூ.30 லட்சம் பணம் கொடுக்க வந்தவர்கள்போல கடத்தல்காரர்களிடம் போலீஸார் பேசினர். இதை உண்மை என்று நம்பிய கடத்தல்காரர்கள் சோகன்லாலை ஒரு காரில் ஏற்றிக் கொண்டு லத்தூரில் ஒரு சாலை பகுதிக்கு வந்தனர்.
உடனே போலீஸார் அதிரடியாக செயல்பட்டு சோகன்லாலை மீட்கும் முயற்சியில் ஈடுபட, அவர்கள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். சினிமாவில் வருவதுபோல கடத்தல்காரர்கள் சென்ற காரை போலீஸார் காரில் இடித்து தள்ளி, அவர்கள் நகரவிடாமல் தடுத்து சுற்றி வளைத்து கிரன்முரே என்பவர் உட்பட 7 பேரை கைது செய்தனர். விசாரணையில் இந்த கும்பல் பெரிய அளவில் நெட்வொர்க் அமைத்து பலரை கடத்தியுள்ளது தெரியவந்தது. சோகன்லால், சசிக்குமார் இருவரையும் போலீஸார் மீட்டு சென்னை அழைத்து வந்தனர்.
“சோகன்லாலின் மும்பை நண்பரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் கூறிய பெயரில் ஒரு சாமியார் மும்பையில் உள்ளார். ஆனால் அவருக்கும் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இல்லை” என்று போலீஸார் தெரிவித்தனர்.