திருநெல்வேலியில் மறியலால் பதற்றம்: கலப்பு மணம் புரிந்தவரின் தங்கை கொலை

திருநெல்வேலியில் மறியலால் பதற்றம்: கலப்பு மணம் புரிந்தவரின் தங்கை கொலை
Updated on
1 min read

திருநெல்வேலி வண்ணார் பேட்டை இளங்கோ நகரைச் சேர்ந்த சண்முகவேல் மகன் விஸ்வநாதன்(29). செங்குளம் அருகே ரயில்வே கேட் கீப்பராக பணிபுரிகிறார். ஒரு மாதத்துக்கு முன் இவரும், தச்சநல்லூரைச் சேர்ந்த சங்கர் மகள் காவேரி என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். பெண்ணின் பெற்றோர் இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், விஸ்வநாதனும், காவேரியும் தலைமறைவாகினர்.

இதனிடையே, “காதல் திருமணம் செய்த மகனை காணவில்லை. பெண்ணின் பெற்றோர் எங்களை மிரட்டுகின் றனர். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கோரி, விஸ்வநாதனின் தந்தை சண்முகவேல் பாளையங் கோட்டை போலீஸில் புகார் செய்திருந்தார். நேற்று மதியம் வண்ணார்பேட்டை இளங்கோ நகரில் வீட்டில் தனியாக இருந்த விஸ்வநாதனின் சகோதரி கல்பனா (27) அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து தெரியவந்ததும் இளங்கோ நகர் மக்கள் வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மணப்பெண் காவேரியின் தந்தை சங்கர் மட்டுமே தனியாக வந்து, இக்கொலையில் ஈடுபட்டதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்தச் சம்பவத்தால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாநகர காவல்துறை துணை ஆணையர் பிரதீப்குமார் உள்ளிட்ட போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். கொலை க்கு காரணமானவர் கைது செய்யப்படுவார் என்று உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. சங்கர் மீது வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை போலீஸார், தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in