

புதுச்சேரியில் பாஜக தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்ட பின்பு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நிருபர் களிடம் பேசியது: கருத்துக் கணிப்பு கள் என்பது நேரடியாக மக்களிடம் சென்று எடுக்கப்படுபவை அல்ல. கேரளம், புதுச்சேரி, தமிழகத்தில் ஓரே நாளில் வாக்குப்பதிவு நடப்பதால், இதுபோன்ற கருத்துக் கணிப்புகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின் போது தமிழகத்தில் பாஜக கூட்டணி 19.6 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது. தற்போது கூட்டணி கட்சிகள் இல்லாத நிலையிலும் பாஜகவுக்கு என 10 சதவீதம் வாக்குகள் உள்ளன.
ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் பண நடமாட்டத்தை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலையிட வேண்டும் என கூறுகிறார் கருணாநிதி. ஆனால், அவர் முதல்வராக இருந்து, மோடி தலையிட்டால் மாநில சுயாட்சிக்கு ஆபத்து என குரல் எழுப்புவார். தேர்தல் ஆணையம் தான் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் நேரத்தின்போது தமிழகத்தில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கல் செய்தவர்களையும், அதில் ஈடுபட்டது எந்த கட்சி என்பதையும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதில் ஆணையம் அல்லது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ 16-ம் தேதி மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் உரிய தண்டனை தருவர்.
புதுச்சேரியை பொறுத்தவரை காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரி பின்தங்கிய நிலைமைக்கு சென்றுவிட்டது. மாநிலத்துக்கு தேவையான அனைத்து நிதியுதவியும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. மாநில அரசும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு நிதியை பெற வேண்டும் என்று தெரிவித்தார்.