

சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா செல்லும் சாலைகளை புதுப்பிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள், இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர். அதனால் அந்த சாலைகள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சி யின் பொதுச்செயலர் ஜெயலலிதா, சென்னை பல்கலைக்கழக அரங்கில் நாளை (திங்கள்கிழமை) முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். முன்னதாக ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை முன்னிட்டு அவர் பயணம் செய்யும் ராதாகிருஷ்ணன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, அடையாறு மேம்பாலம், சர்தார் பட்டேல் சாலை ஆகியவற்றை புதுப்பிக்கும் பணியை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக் கிழமை இரவு முதல் இரவு, பகலாக மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையோரம் மற்றும் நடுவில் உள்ள சாலை தடுப்புகள், மரங்கள் ஆகியவற்றுக்கு கருப்பு, வெள்ளை நிற வண்ணங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. சாலையோரம் சிமெண்ட் கான்கிரீட்டுகள் போடப் பட்டு வருகின்றன. மேலும் சாலை நடுவில் உள்ள கழிவுநீர் குழாய் மூடிகள் அமைந்துள்ள இடங்களில் உள்ள பள்ளங்கள் சரி செய்யப்பட்டு, வாகனங்கள் இலகுவாக செல்லும் வகையில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.