

கோவை: சிறுவாணி அணை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இன்றைய (ஜூலை 7-ம் தேதி) நிலவரப்படி அணையில் 20.07 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.
கோவை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 863.40 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அணையில் 49.50 அடி வரை நீரைத் தேக்க முடியும். ஆனால், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கேரள அரசின் சார்பில், சிறுவாணி அணையில் 45 அடி அளவு வரை மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. அதற்கு மேல் தண்ணீர் தேங்கினால் வனப்பகுதியில் உள்ள மதகுகள் வழியாகவும், கோவைக்கு குடிநீருக்காகவும் கூடுதலாக திறந்து விடப்படுகிறது.
தென்மேற்கு பருவமழைக்காலத்தை தொடர்ந்து சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டமும் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. அதற்கேற்ப அணையில் இருந்து குடிநீருக்காக கோவைக்கு விநியோகிக்கப்படும் நீரின் அளவும் தொடர்ச்சியாக அதிக அளவில் உள்ளது.
சிறுவாணி அணையில் கடந்த 4-ம் தேதி நிலவரப்படி 156 மி.மீட்டர், 5-ம் தேதி 110 மி.மீட்டர், 6-ம் தேதி 66 மி.மீட்டர், இன்றைய (ஜூலை 7-ம் தேதி ) நிலவரப்படி 55 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. அதேபோல், சிறுவாணி அணையின் அடிவாரப் பகுதியில் கடந்த 4-ம் தேதி நிலவரப்படி 24 மி.மீட்டர், 5-ம் தேதி 19 மி.மீட்டர், 6-ம் தேதி 39 மி.மீட்டர், இன்றைய (ஜூலை 7-ம் தேதி) நிலவரப்படி 32 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.
3-வது வால்வை நெருங்கியது
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘சிறுவாணி அணை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அணையில் 2 வால்வுகள் நீரில் மூழ்கியுள்ளன. 3-வது வால்வை நீர்மட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி சிறுவாணி 20.07 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. அதாவது 869.52 மீட்டர் அளவுக்கு தண்ணீர் உள்ளது. நேற்று சிறுவாணி அணையில் இருந்து விநியோகத்துக்காக 100 எம்.எல்.டி அளவுக்கு குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. தற்போதைய அணையின் உள்ள நீர்மட்ட நிலவரப்படி, அடுத்த 48 நாட்களுக்கு கோவைக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்க முடியும்,’ என்றனர்.