

திட்டக்குடி: திட்டக்குடி அருகே சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 சிறுவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் அளித்த தகவல்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், அதே பள்ளியில் பிளஸ் 2 மாணவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மே 22-ம் தேதி அந்த மாணவர் தனது பிறந்தநாளை 10-ம் வகுப்பு மாணவியுடன் கொண்டாடியுள்ளார். அப்போது பிளஸ் 2 மாணவரும், 10-ம் வகுப்பு மாணவியும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை அதே பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் எடுத்துள்ளனர்.
பின்னர் அந்தப் புகைப்படம் மற்றும் வீடியோவை காண்பித்து, மாணவியின் பெற்றோரிடத்தில் கூறுவதாக மிரட்டி வந்துள்ளனர். இதையடுத்து கடந்த 1-ம் தேதி பள்ளிக்கு வந்திருந்த மாணவியை, மதிய உணவு இடைவேளையின்போது, 10-ம் வகுப்பு மாணவரின் வீட்டிற்கு மாணவியை அழைத்துச் சென்று 3 மாணவர்கள் இணைந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இதையும் ஒரு மாணவர் வீடியோ எடுத்து, வெளியே சொல்லக் கூடாது என அதை வைத்து மிரட்டிவந்துள்ளனர்.
இதுகுறித்து மாணவி தனது தாயிடம் கூற, மாணவியின் தாய், மாணவர்களின் செயல் குறித்து ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் 10-ம் வகுப்பு மாணவர்கள் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.