கோவையில் அதிமுக பிரமுகர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

கோவையில் அதிமுக பிரமுகர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
Updated on
1 min read

கோவை: கோவையில் அதிமுக பிரமுகர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.

கோவை வடவள்ளியில் உள்ள தொண்டாமுத்தூர் சாலை, நாராயணசாமி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர். மேலும், 'நமது அம்மா' நாளிதழ் வெளியீட்டாளராகவும், அதிமுக கோவை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலராகவும் உள்ளார். சில ஒப்பந்த நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவரது மனைவி கோவை மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார்.

வரி ஏய்ப்பு தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று (ஜூலை 6) வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீடு, பி.என்.புதூரில் உள்ள அவரது தந்தை ராஜன் வீடு, பீளமேட்டில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (ஜூலை 7) பீளமேட்டில் உள்ள சந்திரசேருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

அதேபோல், புலியகுளத்தில் உள்ள சந்திசேகர் தம்பதியருக்கு உரிய ஆலய அறக்கட்டளையின் அலுவலகம், வடவள்ளியின் மற்றொரு பகுதியில் உள்ள சந்திரசேகரின் சகோதரர் செந்தில் பிரபு என்ற அன்புவின் வீடு ஆகிய இரண்டு இடங்களிலும் இன்று மதியம் வருமான வரித் துறையினர் சோதனையை தொடங்கினர்.

இந்த சோதனை மாலை வரை தொடர்ந்து. அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சோதனை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in