கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: தொழிலதிபரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: தொழிலதிபரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை
Updated on
1 min read

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக, தொழிலதிபரிடம் தனிப்படை போலீஸார் இன்று விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரித்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஓட்டுநர் கனகராஜ் சம்பவம் நடந்த சில நாட்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது.

கோடநாடு வழக்கு குறித்து விசாரிக்க, போலீஸ் அதிகாரிகள் அடங்கிய தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டன. தனிப்படை போலீஸார் மேற்கண்ட வழக்கில் முன்னரே கைது செய்யப்பட்ட நபர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள் என 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் பலரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கண்ட வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கோவையைச் சேர்ந்த தொழிலதிபரான செந்தில்குமாருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இவர், பிரபல கல்வியாளரும், தொழிலதிபருமான ஆறுமுகசாமியின் மகனாவார். அதாவது, கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறையினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது சென்னை சிஐடி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த செந்தில்குமாரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர்.

இச்சூழலில், கோடநாடு எஸ்டேட்டில் மாயமான ஆவணங்கள், செந்தில்குமாரின் வீட்டில் இருந்து வருமான வரித் துறையினரால் கைப்பற்றப்பட்டதாக போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்தன. அதனடிப்படையில் தனிப்படை போலீஸார், வருமான வரித்துறையினரிடம் இருந்து செந்தில்குமாரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வாங்கி ஆய்வு செய்தனர்.

சம்மன் அனுப்பினர் : அதைத் தொடர்ந்து, ஆவணங்கள் கைபற்றப்பட்டது குறித்து விசாரிக்க நேரில் ஆஜராகும்படி தொழிலதிபர் செந்தில்குமாருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். கோவை போலீஸ் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள விசாரணைப் பிரிவு அலுவலகத்தில், தொழிலதிபர் செந்தில்குமார் இன்று (ஜூலை 7-ம் தேதி) நேரில் ஆஜாரானார். அவரிடம் கோடநாடு எஸ்டேட்டில் மாயமான ஆவணங்கள், அவரது வீட்டில் கண்டறியப்பட்டது எப்படி என்பது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சில மணி நேரங்கள் தொடர்ந்தன.

இதுதொடர்பாக மேற்கு மண்டல ஐஜி ஆர்.சுதாகர் கூறும்போது,‘‘ சென்னை சிஐடி நகரில் உள்ள செந்தில்குமாரின் வீட்டிலிருந்து வருமான வரித் துறையினர் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், கோடநாடு வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in