

சென்னை: சென்னை நொச்சிக்குப்பத்தில் ரூ.9.97 கோடியில் நவீன மீன் அங்காடி அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான 2.25 கி.மீ., தூர மெரினா லுாப் சாலையை மாநகராட்சி மேம்படுத்தி வருகிறது. இந்த சாலையில் பட்டினப்பாக்கம் லுாப் சாலை வியாபாரிகளுக்காக, நொச்சிக்குப்பம் பகுதியில் நவீன முறையில் மீன் அங்காடி அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அண்ணா பல்கலை.யின் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள, மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்திலான மீன் அங்காடி அமைக்கப்பட உள்ளது.
இதில், 9.97 கோடி ரூபாய் செலவில், 366 கடைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு கடையும், 6.5 அடி நீளமும் 4.9 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். மேலும், 60 இருசக்கர வாகனங்கள்; 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் ஏற்படுத்தப்படள்ளது.
மீன்கள் விற்பனை மற்றும் மீன்களை வெட்டி சுத்தம் செய்தவற்கு என தனித் தனியாக இடங்கள் உள்ளன. மீன்களைப் பதப்படுத்தி வைப்பதற்கான வசதி, கழிவுகளை சுத்திகரிப்பதற்கான வசதிகள் உள்ளன.
எனவே, திட்ட அறிக்கைக்கு, அண்ணா பல்கலை.யின் அனுமதி பெற்றப்பின், ஒன்றரை ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டு, வியாபாரிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதைதொடர்ந்து, மற்ற பகுதிகளில் உள்ள சாலையோர மீன் வியாபாரிகள் கணக்கெடுத்து, அங்கேயும் சர்வதேச அளவிலான அங்காடி அமைக்கப்படும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.