

திருவண்ணாமலை மாவட்டத் தேர்தல் களத்தில் திமுக, அதிமுகவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாமக கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் பாமக கவனம் செலுத்தியது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தி.மலை மாவட்டத்துக்கு அடிக்கடி வந்து கூட்டங்களை நடத்தினர். அப்போது அவர்கள், இந்த மாவட் டத்தில் உள்ள வாக்கு வங்கியை நிரூபித்து வெற்றி பெறுவோம் என்று கூறினர்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வேட்பாளர்களை பாமக நிறுத்தியது. அவர்களை ஆதரித்து ராமதாஸும் அன்புமணி ராமதாஸும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தொடக்கத்தில் அவர்கள் காட்டிய ஆர்வம், அதன்பிறகு இல்லாமல் போனது. இப்போது, அதே பாணியை வேட்பாளர்களும், தொண்டர்களும் பின்பற்றி வருகின்றனர். இதனால் பாமகவின் வெற்றிக் கணக்கு, திருவண்ணாமலை மாவட்டத்தில் எடுபடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து பாமகவினர் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் பாமகவுக்கு வாக்கு வங்கி இருப்பது உண்மைதான். அதனை கைப்பற்றவும், தக்க வைக்கவும் தலைமையில் உள்ளவர்கள் முயற்சி செய்கின்றனர். ஆனால், அவர்களது பிரச்சார வியூகம், இந்த தேர்தலில் எடுபடாமல் போய்விட்டது. வந்தவாசி மற்றும் செங்கம் தனித் தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பாமக பெற்றாலும், இதர 6 தொகுதிகளில் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.
திமுக, அதிமுகவுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில், பாமக வேட்பாளர்கள் பிரச்சாரம் இல்லாமல் போனது. பிரச்சாரத்தின் வேகம் குறைந்துவிட்டது. இரு தனித் தொகுதிகளில் எதிர்த்துப் போட்டியிடும் பிரதானக் கட்சி வேட்பாளர்கள் வலுவாக இல்லாததால், அங்கு கூடுதலாக வாக்குகள் கிடைக்கலாம். அதையும் உறுதியாக சொல்ல முடியாது. இதர 6 தொகுதிகளில் முக்கிய கட்சி வேட்பாளர்கள் பலமாக இருப்பதால், பாமகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டங்களை பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்தினார். செங்கம், கலசப்பாக்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத் தூர் சட்டப்பேரவைத் தொகுதி யில் பிரச்சாரத்துக்கு கூட வரவில்லை.
அதேபோல், சேத்துப்பட்டு மற்றும் செய்யாறில் மட்டும் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். இனிமேல், அவர்கள் இருவரும் வரமாட்டார்கள். அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்” என்றனர்.