சென்னையில் உங்கள் இடத்தில் செல்போன் டவர் இருந்தால் வரிவிதிப்பு எப்படி? - முழு விளக்கம்

சென்னையில் உங்கள் இடத்தில் செல்போன் டவர் இருந்தால் வரிவிதிப்பு எப்படி? - முழு விளக்கம்
Updated on
1 min read

கிராமப்புறங்களில் பெரும்பாலும் செல்போன் டவர்கள் திறந்தவெளி நிலங்களில்தான் இருக்கும். குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளில் இருந்து தொலைவில்தான் இருக்கும். ஆனால், நகர்புறங்களில் நிலைமை அப்படி இல்லை. பெரும்பாலும் வீடுகளின் மாடியில்தான் செல்போன் டவர் இருக்கும்.

இந்த டவர்களை நிறுத்த சம்பந்தபட்ட நிறுவனங்கள் அந்த இடத்தின் உரிமையாளர்களுக்கு வாடகை செலுத்த வேண்டும். இப்படி செல்போன் டவர்களுக்கு தங்களின் இடங்களை வாடகைக்கு விடுபவர்கள் சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வேண்டும். இந்த வரி விதிப்பு முறையை அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

உலக வங்கி நிதி உதவியின் கீழ் சென்னை சிட்டி பாட்னர்ஷிப் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் சென்னை மாநகராட்சியின் சொந்த வருவாயை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க அதேனா இன்ஃபனாமிக்ஸ் இந்தியா (Athena Infonomics India Pvt.Ltd) என்ற நிறுவனம் நியமிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த நிறுவனம் தனது பரிந்துரைகளை சென்னை மாநகராட்சிக்கு சமர்பித்துள்ளது.

இந்த பரிந்துரைகளில், செல்போன் டவர் மீதான சொத்து வரி விதிப்புகள் மேற்கொண்டு, செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2022-க்குள் சொத்து வரி வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி சென்னையில் உள்ள அனைத்து டவர்களையும் ஆய்வு செய்து புதிய விரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 3,000 டவர்கள் உள்ளன. இந்த டவர்கள் அனைத்தும் வாடகை இடத்தில்தான் இயங்கி வருகின்றன. பெரும்பாலான டவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் உள்ளன.

சென்னை மாநகராட்சி மாநகராட்சியின் பழைய வரி விதிப்பு முறையின்படி அனைவருக்கும் ஒரே மாதிரியான வரி விதிக்கப்பட்டு வந்தது. ஆதாவது, அனைத்து செல்போன் டவர்களுக்கும் அரையாண்டுக்கு ரூ.15 ஆயிரம் சொத்து வரி விதிக்கப்பட்டு வந்தது. இதன்படி செல்போன் டவர் வைக்க அனுமதி அளித்தவர்கள் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டும்.

இந்த நடைமுறையை மாற்றி புதிய முறையில் டவர்களுக்கு வரி விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி வாடகையின் அடிப்டையில் இந்த வரி நிர்ணயம் செய்யப்படும். சென்னையில் அனைத்து இடங்களிலும் குடியிருப்புகளுக்கான வாடகை ஒன்றாக இருப்பது இல்லை. ஒரு இடத்தில் அதிகமாகவும், ஒரு இடத்தில் குறைவாகவும் உள்ளது. எனவே செல்போன் டவர்களுக்கான வாடகையும் ஒரு இடத்தில் குறைவாகவும், ஒரு இடத்தில் அதிகமாகவும் இருக்கும்.

எனவே, பழைய முறையான நிலையான சொத்து வரி என்பதை மாற்றி வாடகைக்கு ஏற்ற சொத்து வரி விரைவில் நிர்ணயம் செய்யப்படவுள்ளது. இதன்படி வாடகையில் எத்தனை சதவீதம் சொத்து வரியாக செலுத்த வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. எனவே, விரைவில் இந்த புதிய முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in