Published : 07 Jul 2022 03:41 PM
Last Updated : 07 Jul 2022 03:41 PM

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பாக, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் மூன்று கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில், நீதிமன்றத்தில் தெரிவித்த 23 தீர்மானங்களை தவிர, நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அதை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக கருதி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை தண்டிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இவர்களை தண்டிக்கும் விதமாக மேல்முறையீடு வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்றும், அவைத் தலைவர் அறிவித்த அடுத்த பொதுக்குழு கூட்டம் குறித்த அறிவிப்பு செல்லாது என்பதால், ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க கோரியும் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த கூடுதல் மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணைக்கும், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அதன் அடிப்படையில் தொடரப்பட்ட மூன்று கூடுதல் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x