

சென்னை: மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கும், பி.டி.உஷாவுக்கும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நியமனத்துக்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக இசையமைப்பாளர் இளையராஜா, விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இளையராஜாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள வாழ்த்தில், "உலக முழுவதும் ரசிகர்களை தனது இசையால் மகிழ்வித்து, இசைஞானி என்று அன்புடன் அழைக்கப்படும் இசைஞானி இளையராஜா அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதை பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பி.டி.உஷாவிற்கு தெரிவித்துள்ள வாழ்த்தில், " இந்திய தடகள சாதனை வீராங்கனை பி.டி.உஷா, மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.