

சென்னை: இந்திய ஒடுக்கப்பட்டோர் அரசியல் வரலாற்றில் பாபா சாகேப் அம்பேத்கருக்கு (1891- 1956) முன்னோடியாகவும், சக பயணியாகவும் இருந்தவர் இரட்டைமலை சீனிவாசன் (1860 - 1945). அம்பேத்கர் பிறந்த ஆண்டில் ‘பறையர் மகாஜன சபை’யை உருவாக்கி, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக சீனிவாசன் போராடினார். 1900-ல் தென்னாப்பிரிக்கா சென்ற அவர், அம்பேத்கர் அரசியலில் நுழைந்த 1920-ல் தாயகம் திரும்பி தீவிர அரசியலை முன்னெடுத்தார்.
அவ்வாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உழைத்த இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: "தமிழகப் பட்டியலின மக்களில் முதல் பட்டதாரி; அண்ணல் அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர், காந்தியடிகள் போன்ற பேராளுமைகளோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக உழைத்த "திராவிடமணி" இரட்டைமலையாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை: "பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காகத் தனது கடைசி மூச்சு வரை பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளான இன்று, அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரது நினைவுகளைப் போற்றியதற்கு தமிழக பாஜக பெருமை கொள்கிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டிடிவி தினகரன்: "ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலை உலக அரங்கில் ஓங்கி ஒலித்தவரும், மக்கள் பிரதிநிதியாக பணியாற்றி பட்டியல் இன மக்களின் உயர்வுக்காக, ஒருங்கிணைந்த சென்னை மாகாண சட்டப்பேரவையில் பல்வேறு தீர்மானங்களை கொண்டுவந்தவருமான திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 163வது பிறந்த நாளில் அன்னாரது வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சீமான்: "சமூகநீதிப் போராளி, தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் புகழைப் போற்றுவோம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.