Published : 07 Jul 2022 11:38 AM
Last Updated : 07 Jul 2022 11:38 AM

இளையராஜாவுக்கு எம்.பி. பதவி: ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை: "இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கியிருப்பது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. திறமையையும், சமூக நீதியையும் நிலை நாட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது கோடானு கோடி நன்றிகள்" என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இறைவனையே இசை என்ற பொருளில் ஏழிசையாய், இசைப் பயனாய் என்று பாடினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.இப்படிப்பட்ட இசையின் மூலம் உலக மக்களை கொள்ளை கொண்டவரும், தன் இசைத் திறமையால் தலைமுறை தாண்டி ரசிகர்களை கவர்ந்தவரும், பிரபல இசையமைப்பாளருமான " இசைஞானி" இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தி எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை அளிக்கிறது.

என்னுடைய சொந்த மாவட்டமான தேனியைச் சார்ந்தவர் என்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள். திறமையையும், சமூக நீதியையும் நிலை நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது கோடானு கோடி நன்றிகள்" என்று அவர் கூறியுள்ளார்.

கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் விஜயேந்திர பிரசாத், கொடையாளரும், கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலா கோயில் நிர்வாகியுமான வீரேந்திர ஹெக்டே உள்ளிட்டோரை நியமன எம்.பி.க்களாக நியமித்து மத்திய அரசு நேற்று (ஜூலை 6) அறிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x