Published : 04 May 2016 08:59 AM
Last Updated : 04 May 2016 08:59 AM

மாவட்ட விளையாட்டு விடுதிகளில் சேர மாணவர்கள் நாளை வரை விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு

மாவட்ட விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் மே 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பள்ளி மாணவ-மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 23 விளையாட்டு விடுதிகள், 5 விளையாட்டுப் பள்ளிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு விடுதிகளில் 2016-17ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 20-ம் தேதி பெறப்பட்டன. தற்போது மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில்கொண்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலகங்களில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மே 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டில் ஆர்வமுடைய மாணவ-மாணவிகள் மே 5-ம் தேதி வரை அனைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களிடம் விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) இருந் தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்திசெய்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரியிடம் மே 6-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான தேர்வு மே 7 முதல் 9-ம் தேதி வரை அந்தந்த மாவட்ட விளையாட்டு அரங்குகளில் நடைபெறும். மாவட்ட வாரியாக தேர்வு நடைபெறும் நாள் விவரம் வருமாறு:-

மே 7: மதுரை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, நாகப்பட்டிணம், கரூர். சேலம், நாகர்கோவில், கடலூர், வேலூர், பெரம்பலூர்.

மே 8: திண்டுக்கல், சிவகங்கை, தருமபுரி, திருப்பூர், திருவாரூர், புதுக்கோட்டை, ஈரோடு, தூத்துக்குடி, விழுப்புரம், அரியலூர்.

மே 9: விருதுநகர், தேனி, திருவண்ணாமலை, கோவை, தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், சென்னை, திருநெல்வேலி, திருவள்ளூர், காஞ்சிபுரம்.

தேர்வு காலை 8 மணிக்கு தொடங்கும். தேர்வு தொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் இருந்து அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெற்றாலும், கிடைக்கப் பெறவில்லை என்றாலும் குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்குக்கு உரிய சான்று களுடன் சென்று தேர்வில் பங்கேற்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x