Published : 07 Jul 2022 05:05 AM
Last Updated : 07 Jul 2022 05:05 AM

ஆக்கப்பூர்வமான வகையில் மக்கள் பணிகளைத் தொடர்வதே நம் கடமை - தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: விமர்சனங்களை புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான வகையில் மக்கள் பணியை தொடர்வதே நம் கடமை. மக்களைத் தேடிச் சென்று, குறைகளை கேட்டறிந்து தீர்த்திடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஓராண்டை வெற்றிகரமாக கடந்துள்ள திமுக ஆட்சி, ஓய்வின்றி தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது. அரசின் பணிகள், பயன்கள் மாநிலத்தின் கடைக்கோடிவரை சென்று சேரவேண்டும் என்பதே எனது நோக்கம். அதை உறுதி செய்யவே மாவட்டம்தோறும் பயணிக்கிறேன்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஜூன் 28-ம்தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட நிலையில் வழி முழுவதும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 29-ம் தேதி திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக திறப்பு விழாவுக்குச் சென்றபோது, திமுகவினருடன் பொதுமக்களும் நிறைந்திருந்தனர்.

பொதுமக்கள் நலம் விசாரிப்பு

பொதுவாக, எனக்கு இதைச்செய்து கொடுங்க என மக்கள் கேட்பார்கள். ஆனால், திருப்பத்தூரில் பொதுமக்கள் பலரும், ‘உடம்பு சரியில்லேன்னு சொன்னாங்களே, நல்லாயிட்டீங்களா? உடம்பை நல்லா பாத்துக்குங்க. கொஞ்சம் ஓய்வெடுத்து வேலை பாருங்க’ என்றுதான் அக்கறையுடன் தெரிவித்தனர். வேலூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி பிரதீஷ் என்ற பெண் அளித்த துண்டுச் சீட்டில், ‘சாமை உணவு எடுத்துக் கொள்ளுங்கள் ஐயா. காய்ச்சல் வராது’ என்று எழுதியிருந்தார். அதை படித்தபோதே உடம்புக்கு புதிய தெம்பு வந்தது.

ராணிப்பேட்டையில் காப்பகப் பள்ளி பற்றி அறிந்து திடீரென அதை பார்வையிட்டேன். அங்கு கண்காணிப்பாளர் விடுப்பில் இருப்பதையும், காப்பக பொறுப்பாளர் வரவில்லை என்பதையும் அறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். பள்ளி வகுப்பறைக்குச் சென்றதும் ஆசிரியையும், மாணவர்களும் ஆச்சரியமாகப் பார்த்தனர். சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனை தொடர்பு கொண்டு, தமிழகத்தில் உள்ள காப்பகப் பள்ளிகளை மேம்படுத்தும் செயல்திட்டத்தை மேற்கொள்ள அறிவுறுத்தினேன்.

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ரூ.342.24 கோடி மதிப்பிலான 69 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தேன். ரூ.68.74 கோடி மதிப்பீட்டிலான 61 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், 1,18,346 பயனாளிகளுக்கு ரூ.731.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினேன்.

ஜூலை 1-ம் தேதி கரூருக்குப் பயணித்தேன். அங்கு 80 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். நலத் திட்ட உதவிகள், அடிக்கல் நாட்டியது என அங்கு தொடங்கிவைத்த திட்டங்களின் மதிப்பு ரூ.1,100 கோடியாகும்.

நாமக்கல்லில் அருந்ததியின மக்கள் வாழும் சிலுவம்பட்டிக்குச் சென்றேன். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் வழங்கப்பட்ட 3 சதவீத உள்ஒதுக்கீட்டில் ஓமியோபதி படித்ததாக ஒரு இளைஞர் கூறினார். அவர் வீட்டுக்குச் சென்று டீ சாப்பிட்டேன். அப்பகுதியில் குடிநீர் பிரச்சினை இருப்பதை மக்கள் தெரிவித்தனர். அதையும், சாலை வசதிகளையும் உடனடியாக செய்துதர ஆட்சியரிடம் தெரிவித்தேன்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு

அரசு அலுவலகங்கள் மூலம் நிறைவேற்றப்படும் பணிகளை காகிதங்களைவிட களம் காட்டும் என்பதால் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

நாமக்கல்லில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றேன். அதில் பேசும்போது, ‘‘ஆட்சிக்கு பெருகி வரும் நல்ல பெயரை தக்க வைப்பது உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கைகளில்தான் உள்ளது. அதனால், ஒழுங்கீனமும் முறைகேடும் தலைதூக்கினால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்ற கண்டிப்பை வெளிப்படுத்தி விட்டு சென்னை திரும்பினேன்.

ரூ.2.20 லட்சம் கோடி முதலீடு

ஜூலை 4-ம் தேதி முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றேன். கடந்த ஓராண்டில் தமிழகத்திலும், வெளிநாட்டிலும் நடத்தப்பட்ட 6 மாநாடுகளில் ரூ.2.20 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் வந்துள்ளன. அரசின் ஒவ்வொரு செயல்பாடும் தமிழகத்தை ஒரு அங்குலமாவது உயர்த்தும் வகையில் இருக்க வேண்டும். தமிழக மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்கு. விமர்சனங்களை புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான வகையில் மக்கள் பணியை தொடர்வது நம் கடமை. எனவே, மக்களைத் தேடிச் சென்று, குறைகளைக் கேட்டறிந்து தீர்த்திடுவோம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x