குடியரசுத் தலைவர் தேர்தல் முன்னேற்பாடுகள்; தமிழக அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை: தலைமை தேர்தல் அதிகாரி, சட்டப்பேரவைச் செயலர் பங்கேற்பு

குடியரசுத் தலைவர் தேர்தல் முன்னேற்பாடுகள்; தமிழக அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை: தலைமை தேர்தல் அதிகாரி, சட்டப்பேரவைச் செயலர் பங்கேற்பு
Updated on
1 min read

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சட்டப்பேரவைச் செயலருடன் ஆலோசனை நடத்தினர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், பாஜக வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.

வரும் 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, அந்தந்த மாநில சட்டப்பேரவைச் செயலகங்கள், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. இத்தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படும் இந்த தேர்தலில், சட்டப்பேரவை, மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர்.

தமிழகத்தில், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை செயலக வளாகத்தில் உள்ள, கூட்ட அறையில் காலை 10 முதல் 5 மணி வரை நடைபெறுகிறது.

இந்த தேர்தலுக்கான உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக, சட்டப்பேரவைச் செயலர் கி.சீனிவாசன் மற்றும் சட்டப்பேரவைச் செயலக இணைச் செயலர் இரா.சாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, காணொலி வாயிலாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில், தமிழகத்தில் இருந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, உதவி தேர்தல் அதிகாரிகள் கி.சீனிவாசன், சாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், வாக்குப் பதிவுக்கான பெட்டியை டெல்லியில் இருந்து கொண்டுவருவது, முடிந்ததும் டெல்லிக்கு கொண்டு செல்வது, வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள், வாக்காளர்கள் வாக்குகளை செலுத்த விரும்பும் இடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வாக்குப் பதிவுக்கான பெட்டியை டெல்லியில் இருந்து கொண்டுவருவது, முடிந்ததும் டெல்லிக்கு கொண்டு செல்வது, வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in