வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி முதல்வர் லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.மோகன் தெற்கு சூடானின் ஐ.நா. தளபதியாக நியமனம்

லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.மோகன்
லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.மோகன்
Updated on
1 min read

உதகை: வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி முதல்வரான லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.மோகன், தெற்கு சூடான் நாட்டுக்கான ஐ.நா. வின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தெற்கு சூடான் 2011-ல் சுதந்திரம் பெற்று புதிய நாடாக மாறியது. இதன்மூலம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சூடானில் நீடித்த உள்நாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தெற்கு சூடானின் பாதுகாப்புக்காக, முதன்முதலில் 2011-ல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடிமக்களை பாதுகாப்பது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உகந்த நிலைமைகளை உருவாக்குதல் உட்பட 4 முக்கிய அம்சங்களை இந்த தீர்மானம் கொண்டுள்ளது. இந்த தீர்மானம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

தெற்கு சூடானில் 2011 முதல் அமைதி காக்கும் ஐ.நா. படைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சைலேஷ் தினகர் பணியாற்றினார். அவருக்குப் பிறகு, தெற்கு சூடானில் ஐ.நா.வின் புதிய படைத் தளபதியாக இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.மோகனை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் நியமித்துள்ளார்.

36 ஆண்டுகால ராணுவ பணி

லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.மோகன், 36 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் பணியாற்றியவர். தற்போது நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

தமிழகத்தில் படித்தவர்

இவர், தமிழ்நாட்டின் அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளி மற்றும் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி ஆகியவற்றின் முன்னாள் மாணவர். அவர் பாதுகாப்பு, மேலாண்மை ஆய்வுகள் மற்றும் சமூக அறிவியலில் 2 எம்.பில். பட்டங்கள் பெற்றுள்ளார்.

2008-2012ம் ஆண்டுகளில் வியட்நாம், லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளுக்கான இந்தியாவின் பாதுகாப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.

2000-ம் ஆண்டில் சியரா லியோனில் உள்ள ஐக்கிய நாடுகள் தூதரகத்தின் பணியாளர் அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in