

சென்னை: அதிமுக பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்த பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதிமுகவினருக்கு சமூக வலைதள பயிற்சி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.
அதிமுகவில் பழனிசாமி தரப்பில் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. யாருடைய கையெழுத்தும் இன்றி தலைமைக் கழகம் என குறிப்பிட்டு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பும் பணி நடந்து வருகிறது.
அதில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் வரும் 11-ம் தேதி, காலை 10 மணிக்கு பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும், தேவைப்பட்டால் ஆன்லைனில் கூட கூட்டம் நடத்தப்படலாம் எனவும் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கூட்டத்துக்கு வரும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் க்யூஆர் கோடு, ஆர்எஃப்ஐடி வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.
இதனிடையே அதிமுகவினருக்கு சமூக வலைதள பயிற்சி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. கட்சியின் தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலர் ஆதிராஜாராம் பயிற்சி அளித்தார்.
இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, "சமூக வலைதளங்களில் அதிமுக மற்றும் பழனிசாமிக்கு எதிராக வரும் கருத்துகளுக்கு, தக்க பதிலடி கொடுக்கும் விதமாகவும், திமுகவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் செயலாற்றவும் கட்சியினருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி 3 நாட்களுக்கு நடைபெறும். விருப்பம் உள்ள தொண்டர்கள் பங்கேற்று பயிற்சி பெறலாம்" என்றார்.
இதற்கிடையில், இவர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் 5-ம் தேதி அளித்துள்ள மனுவில், அதிமுக பொதுக்குழு வானகரத்தில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. கரோனா பரவல் தடுப்பு விதிகள் தீவிரமாக்கப்பட்டால், அதற்கு ஏற்ப நிகழ்ச்சி நடைமுறைகளை கடைபிடிப்பதற்கான தொழில்நுட்ப பயிற்சி 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை கட்சி தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளது.
இதில் மாவட்ட செயலர்களால் பரிந்துரைக்கப்படும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் எங்களால் அடையாளம் காட்டப்படும் நபர்களுக்கு கட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு தர வேண்டும்என்று குறிப்பிடப்பட்டுஉள்ளது.
இதன்மூலம் அதிமுக பொதுக்குழுவை இணைய வழியில் நடத்துவதற்கான பணி தொடங்கியுள்ளதாக கட்சி நிர்வாகிகள் கூறினர்.